×

குளத்தூரில் கோயில் வளாகம் ஆக்கிரமிப்பு

குளத்தூர்,மே 28:  குளத்தூரில் விநாயகர் கோயில் வளாகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் இரவு நேரங்களில் பாராக மாறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.குளத்தூர் தெற்கு கண்மாயோரம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழந்தைவிநாயகர் கோயில் உள்ளது. குளத்தூர் பகுதியிலேயே அதிக சொத்து உள்ள விநாயகர் கோவில் இதுதான். சொத்து மட்டும் தான் உள்ளது. ஆனால் தினமும் பூஜை என்பதும் கிடையாது. பராமரிப்பு என்பதும் கிடையாது. மார்கழி மாதம் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மூலமாக பொதுமக்களிடம் வசூல் செய்து ஒரு மாதம் காலை பூஜை மட்டும் நடைபெறுகிறது. மேலும் கோயில் வளாகம் முன்பு ஓம்சக்தி செட்டும் போடப்பட்டு அவ்வப்போது ஓம்சக்தி மன்றத்தினரும் பூஜை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோயில்வளாகம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதுடன் இரவுநேரங்களில்  கோயில் வளாகம் சமூகவிரோதிகளுக்கு பாராக உள்ளது. அப்பகுதியினர் இதை தட்டி கேட்கவும் முடியாமல் சகித்து கொள்ளவும் முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய குளத்தூர் எஸ்ஐ தெரு பகுதியில் அவ்வப்போது ரோந்து வந்ததால் இந்த தொல்லைகள் இல்லாமலிருந்தது.

 தற்போது இங்கு மது குடிப்பது மற்றும் சமூகவிரோத செயல்கள் அதிகரிப்பதாக தெரிகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை கண்டு மனம் உடைந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி பக்தர்கள் கூறியதாவது: அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த விநாயகர் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலுக்கு ஏராளமான நிலங்கள் சொத்தாக இருந்த போதிலும் தினசரி பூஜை மற்றும் பராமரிப்பு என்பது கிடையாது. மார்கழி மாதம் பஜனை பக்தர்களால் நடத்தப்படும் பூஜை மட்டுமே நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி கூட கொண்டாடப்படுவதில்லை. மேலும் கோயிலுக்குள் சிவலிங்கம் இருப்பதால் பக்தர்கள் பிரேதோஷ வழிபாடு நடத்தி வந்தனர்.  இந்நிலையில் சமூக விரோதிகளால் கோயில் வளாகங்களில் இரவில் நடக்கும் அட்டூழியங்களை பார்த்து சகித்து கொள்ள முடியவில்லை. இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது அருந்தும் பாராக மாற்றி கூச்சலிடுகின்றனர். இது குறித்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை.

 அறநிலையத்துறை அதிகாரிகள் இக்கோயில் சம்பந்தமாக தினசரி பூஜையோ பராமரிப்பு வேலைகளோ எதுவும் செய்ய முன்வரவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் கோயில் என்ற அடையாளம் மாறி சமூகவிரோத செயல்களின் கூடாரமாக மாறிவிடும்.
எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் இக்கோயிலை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக ஆக்கிரமிக்கபடும் கோயில் வளாகம் முன்பு சுற்றுசுவர்களை அமைக்கவும், தினசரி பூஜைகள் நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : temple complex ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...